கன்னியாகுமரி, ஜன. 10 –
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகலன்கள் இயக்குனரகத்தின் கீழ் 1971-ம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டு அன்று முதல் இயங்கி வருகிறது.
இப்போது இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்லும் வகையில் முழுவதும் கண்ணாடியால் ஆன லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கத்தின் மேல் நின்று பார்வையாளர்கள் சுற்றி பார்க்கும் வகையில் புதிதாக கேலரியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதிலிருந்து இந்திய பெருங்கடல், அரபிக்கடல். சங்கமிக்கும் முக்கடல் வங்க கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமத்தையும் கன்னியா குமரியின் முழு இயற்கை அழகையும், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையும் பார்த்து ரசிக்கும்படி அமைந்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந் தேதி முதல் கலங்கரை விளக்கத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
கலங்கரை விளக்கத்தை பார்வையிட நுழைவு கட்டணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.25 வீதமும், உள்நாட்டினர் பெரியவர்களுக்கு தலா ரூ.10 வீதமும் சிறியவர்களுக்கு தலா ரூ.5 வீதமும் கேமராவுக்கு ரூ.20ம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.3 வீதமும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 67 ஆயிரத்து 792 சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட்டுள்ளனர். இதில் பெரியவர்கள் 59 ஆயிரத்து 99 பேர். சிறுவர்கள் 8 ஆயிரத்து 544 பேர் ஆவார்கள். வெளிநாட்டினர் 149 பேர் பார்வையிட்டுள்ளனர்.



