குளச்சல், டிச. 8-
முட்டம் பகுதியில் பிளஸ் 2 முடித்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 10ம் தேதி சிறுமி மாயமானார். இதையடுத்து உறவினர்கள் மகளை அவர் வேலை செய்யும் கடைக்கு சென்று விசாரித்தனர். அப்போது அவர் வேலைக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது.
மறுநாள் 11ம் தேதி மாலை சிறுமி வீட்டுக்கு வந்த போது மிகவும் சோர்வாக காணப்பட்டார். அப்போது தாய் இது குறித்து விசாரித்த போது, சிறுமிக்கும் ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதில் வாலிபர் கன்னியாகுமரிக்கு அழைத்து சென்று அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தகவல் அறிந்ததும் வாலிபர் தலைமுறை 9 ஆகிவிட்டார். இதை அடுத்து இன்ஸ்டாகிராம் ஐடி வைத்து வாலிபரை போலீசார் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர் விசாரணையில் சிறுமியை சீரழித்தவர் பினு (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு லாட்ஜில் நாகர்கோவிலை சேர்ந்த மற்றொரு சிறுமியுடன் பினுவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் பினு என்ற இந்த வாலிபர் தான் போலி இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் பீட்டர் என்ற பெயரில் பல சிறுமிகளிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கு, சாத்தான்குளத்தில் ஒரு வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து வினுவை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.



