கன்னியாகுமரி, டிச. 17 –
நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (36). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருணாச்சலத்திற்கும் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதி சேர்ந்த வக்கீல்கள் லெபின் சாம், சுமன் ஆகியோர்களுடைய பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ தினம் அருணாச்சலம் தனது பைக்கை சின்ன முட்டத்தை சேர்ந்த நண்பர் தினேஷ் என்பவரிடம் அடமானம் வைத்து பணம் பெற வந்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட வக்கீல்கள் மற்றும் கண்டால் தெரியும் சிலர் ஒரு காரில் சின்ன முட்டம் துறைமுகம் பகுதியில் வந்து அருணாச்சலத்தை தகாத வார்த்தைகளால் திட்டி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி உள்ளனர். பின்னர் அவரை தாக்கி உள்ளனர்.
மேலும் காரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று அருணாச்சலத்தை மிரட்டி 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து மற்றும் கைநாட்டுகளை வாங்கிக்கொண்டு 10 லட்சம் ரூபாய் தந்தால் தான் விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். மேலும் ரூபாய் 15,000 மதிப்புள்ளான செல்போனை பறித்துக் கொண்டு மிரட்டினார்.
அந்த நேரம் சத்தம் கேட்டு மக்கள் அங்கு குவிந்தனர். இதனை அடுத்து வக்கீல்கள் லெபின் சாம், சுமன் உள்ளிட்டோர் காரில் தப்பி சென்றனர். இந்த தாக்குதல் படுகாயம் அடைந்த அருணாச்சலம் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் கார் வியாபாரியை கடத்தி தாக்கிய வக்கீல்கள் லெபின் சாம், சுமன் மற்றும் பிரைட்சன், பிரகாஷ் மற்றும் கண்டால் தெரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


