நாகர்கோவில், டிச. 18 –
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2003-ம் ஆண்டு துவங்கி நடை பெற்று வருகிறது. 2019-ம் ஆண்டில் நிறைவடைய வேண்டிய இந்த சாலைப்பணிகள் தற்போதும் நிறைவடையாமல் நடந்து வருகிறது. இந்த சாலை “காங்கிரீட்” சாலைகளாக அமைக்க அரசு அதிக நிதி ஒதுக்கி ஒப்பந்தம் செய்தது.
ஆனால் தற்போது நடந்துவரும் பணிகள் மிகவும் தரமற்ற விதத்தில் நடந்து வருவதும் காங்கிரீட் கட்டுமானங்கள் உடைந்து தொங்கும் காட்சிகளும் புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகளாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீர் நிலைகளில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததுள்ளது. பூக்கடை அருகே திங்கணங்கோடு சானலுக்கு அமைக்கப்பட்ட தொட்டி பாலத்தின் தூண்கள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தும் அந்த தூண் உடைந்து வளைந்து தொங்கியது. அந்த தூண்களை அகற்றாமல் உடைந்த அந்த தூண்கள் மீது ஒட்டு வேலை செய்து குமரி மக்களின் உயிரோடு விளையாடும் பணிகளை நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்ட பாலங்கள் கூட கீறல் விழுந்து அப்படியே உடைந்து உள்ளது. குமரியில் பல பகுதிகளில் பணி நடந்து கொண்டு இருக்கும்போதே காங்கிரீட் கட்டுமானங்கள் உடைந்து தொங்குவதால் நான்கு வழி சாலை பயன்பாட்டுக்கு வரும்போது அதில் பயணிக்கும் மக்களின் உயிர்களை நான்கு வழி சாலை காவு வாங்கி விடுமோ என்று அச்சம் கொள்ளும் விதத்தில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக நான்கு வழி சாலை பணிகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
சடையமங்கலம் பகுதியில் பாலத்தின் பக்கச்சுவர் உடைந்து தொங்கும் புகைப்படம் வெளியாகி நான்கு வழி சாலையின் அதிசயத்தக்க தரங்கெட்ட பணிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகள் அதில் பயணிக்க போகும் மக்களின் உயிர்களை காவு வாங்கும் சாலையாக மாறாமல் பாதுகாக்க வேண்டும் என குமரி பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கோரிக்கை விடுத்துள்ளார்.



