நாகர்கோவில், நவம்பர் 28 –
குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 253 கஞ்சா வழக்குகளில் 458 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தொடர்ச்சியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாலிபர்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் என பல தரப்பட்டவர்கள் கஞ்சா விற்பனை வழக்கில் கைதாகி உள்ளனர். 20 கிராம், 50 கிராம் முதல் 3 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் இதுவரை 253 வழக்குகளில் 458 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் இளம் சிறார்கள் அதிகம்பேர் ஆவர். இவர்கள் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் குழுக்கள் அமைத்து தொடர்புகளை உருவாக்கி கஞ்சா கைமாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் பைக்கில் வந்து மறைவான பகுதிகளில் சந்தித்து கஞ்சா சப்ளை செய்துள்ளனர். தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் செல்போன் தொடர்புகள் சோதனை, வங்கி கணக்குகள் ஆய்வு, வீடுகளில் சோதனை போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடர் நடவடிக்கையால் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த கஞ்சா எங்கிருந்து சப்ளை ஆகிறது என்பதை உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. இதனால் கைது நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் கஞ்சா சப்ளையர்கள் மூலம் கஞ்சா பரிமாற்றம் தொடர்கதையாக உள்ளது. அடிமட்ட அளவில் கஞ்சா ஊடுருவி உள்ளதால் தொழிலாளர்களிடம் தொடங்கி மாணவர்கள் வரை எளிதில் கைமாற்றி விடப்படுகிறது.
இதுவரை கைதான நபர்களிடம் நடந்த விசாரணையில் கேரளா, சென்னை போன்ற பகுதிகளில் இருந்து அதிகமாக கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதன் பின்னணியை முழுமையாக கண்டறிய முடியாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு எளிதில் கிடைக்கும் பொருளாக கஞ்சா உள்ளது என கூறப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள், தொழிலாளர்கள் போர்வையில் கஞ்சா வியாபாரிகளும் ஊடுருவி எளிதில் புரோக்கர்கள் மூலம் கைமாற்றி வருகின்றனர். தொடர் நடவடிக்கையால் கைது வழக்கு, பதிவு எண்ணிக்கை அதிகரித்தாலும் கஞ்சா ஒழிப்பு என்பது காவல்துறைக்கு பெரிய சவாலாகவே உள்ளது.


