நாகர்கோவில், நவ. 10 –
பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. மாணவியை அதே பகுதியை சேர்ந்த 57 வயதான உறவினர் ஒருவர் தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அவ்வாறு அழைத்து செல்லும்போது மாணவிக்கு தேவையான பிஸ்கட், சாக்லேட் வகைகள் எல்லாம் வாங்கி கொடுப்பது வழக்கமாம்.
ஆனால் சில நாட்களில் அந்த நபரின் நடவடிக்கை மாறின. மாணவியிடம் பாலியல் ரீதியாக சீண்டல்களை தொடங்கினார்.
சம்பவ தினம் பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி ஆளில்லாத வீடு ஒன்று அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார். மாணவி அவரிடம் இருந்த தப்பி பள்ளிக்கு வந்தார். பள்ளியில் மிகவும் சோர்வாக அழுது கொண்டிருந்ததை பார்த்த சக மாணவிகள் விசாரித்த போது, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி கதறி அழுதார். உடனடியாக இந்த விஷயம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் இது குறித்து உடனடியாக மாணவியின் பாட்டி மற்றும் உறவினர்கள் வரவழைத்து விவரத்தை கூறினார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் அந்த நபரிடம் சென்று விசாரித்த போது, அவர் பொதுமக்களை கத்தியால் வெட்ட முயற்சித்து தப்ப முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்தனர். கைதான நபர் உறவு முறையில் மாணவிக்கு தாத்தா ஆவார். அவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


