பூதப்பாண்டி, அக். 27 –
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்திற்கு பெயர் வைக்க காமராஜர், வ.உ.சிதம்பரனார், திருவள்ளுவர், அண்ணா, ஜீவானந்தம் உள்ளிட்ட 14 பெயர்கள் அரசாணையில் இருந்துள்ளது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அந்த 14 பெயர்களை குறிப்பிடாமல் காயிதே மில்லத் பெயர் வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதற்கு பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காயிதே மில்லத் பெயர் வைக்க முயற்சித்த பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாசில்தார் போலீசார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொது பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தியதால் சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பொது பெயராக பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளை பேருந்து நிலையம் என பெயர் வைக்கலாம் என தெரிவித்தது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.



