தக்கலை, டிச. 15 –
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கோரிக்கை மாநாடு தக்கலை அரண்மனை சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பரமதாஸ் தலைமை தாங்கினார். மாநாடு வரவேற்பு குழு தலைவர் முத்துக்குமரேஸ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் தொடக்க உரையாற்றினார். ஹை கோர்ட் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
மாநாட்டில் வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதி ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக மாதந்தோறும் குறைந்தபட்ச ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவி தொகையாக 5 ஆண்டுகள் வழங்க வேண்டும், பெண் வக்கீல்களுக்கு அனைத்து நீதிமன்றங்களிலும் தனி ஓய்வறைகளும் குழந்தைகள் காப்பகங்களும் அமைத்திட வேண்டும், வழக்கறிஞர்களுக்கான அலுவலக வசதி பார்க்கிங் வசதி கேண்டீன் வசதி நீதிமன்றங்களில் அமைத்திட வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும், நீதிமன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், விசாரணை இல்லாமல் பார் கவுன்சில் நடவடிக்கை எடுப்பது நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர்களுக்கு தனியாக கூட்டுறவு கடன் சங்கம் அமைத்திட வேண்டும், குமரி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கை தீர்மானங்களை வக்கீல்கள் முன்மொழிந்தனர். கோரிக்கைகள் குறித்து மாவட்ட பொதுச்செயலாளர் அனந்த சேகர் விளக்கவுரை ஆற்றினார். அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் மனோஜ் குமார், பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் பொன்ராஜ், நாகர்கோவில், இரணியல், குழித்துறை பத்மநாதபுரம் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநாட்டில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



