நாகர்கோவில், டிச. 23 –
தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கடந்த 18-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும், அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த 19-ந் தேதி முதல் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதில் பங்கேற்ற செவிலியர்கள் இரவிலும் கலைந்து செல்லாமல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (செவ்வாய்க் கிழமை) 5-வது நாளாக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தும் செவிலியர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். எம். ஆர்.பி. மூலம் 8 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அனைவரும் தற்காலிக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். பேறு கால விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இவர்களது கோரிக்கையை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



