திங்கள் சந்தை, பிப்- 23
இரணியல் அருகே உள்ள கண்டன் விளை பகுதியை சேர்ந்தவர் சகாய ஜோதி (45). இவருக்கும் குருந்தன்கோடு ஆலன்விளை பகுதியை சேர்ந்த துரைராஜ் மனைவி சகாயகலா ( 50) என்பவருக்கும் பழக்கம் உண்டு. சகாயகலாவின் மகன் அஜின் என்பவர் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து வந்ததாக தெரிகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சகாயகலா தனது தோழி சத்திய ஜோதியிடம் இருந்து சுமார் 16 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
தற்போது சகாய ஜோதி தனது மகள்களுக்கு திருமணம் பார்க்க தொடங்கியதால் நகையை திருப்பிக் கொண்டுள்ளார். ஆனால் சகாயகலா நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து சகாய ஜோதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரில் 16 பவுன் நகைகளை அடகு வைப்பதாக கூறி மோசடி செய்த சத்திய கலா அவரது கணவர் துரைராஜ், மகன் அஜின், சகாயகலவின் சகோதரி ஹெலன், சகோதரர் மிக்கேல், தங்கராசா மகன் சுரேஷ் ஆகிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த மனு தொடர்பாக நடவடிக்கை இரணியல் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். இரணியல் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.