அரியலூர், நவ;18
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வெ.ஷோபனா தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
01.01.2025 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025-ஆம் ஆண்டில் 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 28.11.2024 வரை படிவங்களை பெற்று படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நேற்றைய தினம் நடைபெற்றது.
முன்னதாக அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனவும், இணைப்பு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பெறப்பட்டுள்ள படிவங்கள் எண்ணிக்கை குறித்தும், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வெ.ஷோபனா கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை போன்றவற்றிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமானது அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது தகுதி உள்ள வாக்காளர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியர்கள் மணிகண்டன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்) அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்