நாகர்கோவில் மே 17
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் மூன்று பேர் பலி
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக குமரி மாவட்டத்தில் காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் முடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் 47 வயதான மனோஜெயன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்த 47 வயதான முன்னாள் ராணுவ வீரர் அச்சுதன் கலைமணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார்.அதே பகுதியை சேர்ந்த 40வயதான , காய்கறி வியாபாரி. ஜெகன் என்ற சந்தோஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார்.
குமரியில் கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.