மதுரை பிப்ரவரி 7,
மதுரையில் தைப்பூசத்திற்கு மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா புகழ் பெற்றது. இதில், தெப்பத் திருவிழாவின் போது, கோயிலிலிருந்து மீனாட்சி சுந்தரேசுவரர், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட மிதவைத் தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலிப்பார். இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தைப்பூசத் தெப்பத் திருவிழா கடந்த ஜனவரி 31 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் தினசரி காலை, மாலை வேளைகளில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர். தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பம் வலம் வருதல் வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் வலம் வரும் வகையில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தகர உருளைகளை அடுக்கடுக்காக வைத்து, அதில் மூங்கில்களை இணைத்து மிதவை தெப்பம் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.