அரியலூர், டிச;31
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2024) தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, வங்கி பற்று அட்டைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் காணொலிக்காட்சி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்து 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பெண்கள் உயர்கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் டிசம்பர் 2024 வரை 1,994 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் புதுமைப் பெண் திட்டம் மூலமாக உதவித்தொகை வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று தற்போது 19 கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வரும் 722 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகைக்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார்.
மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம் பயன்பெறும் மாணவிகள் அனைவருக்கும் Welcome Kit ஆக தமிழ் பெருமிதம் மற்றும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், திருமானூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவனாந்தன், மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்