நீலகிரி. நவ. 15.
வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதியில் கடும் குளிரும் நிலவுகிறது மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் பிரதான தொழிலான தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் பசுந்தேயிலை ரூ. 30 வரை கிடைப்பதால் விவசாயிகள் லாபம் பெற்று வந்த நிலையில் தற்போது மழையின் தாக்கம் நீர் பனியுடன் பெய்வதால் தேயிலையில் கொப்புள நோய் தாக்க தொடங்கியுள்ளது. இதனால் தேயிலை மகசூல் 50 சதவீதம் வரை குறைய தொடங்கியுள்ளது. விவசாயிகள் இதனால் கவலையடைந்துள்ளனர். அதேபோல் மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காளிபிளவர் போன்றவை அழுகல் நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கரும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்வதோடு நீர் பனியும் அதிகமாக கொட்டுகிறது. இதனால் கடும் குளிர் நிலவுவதோடு விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளித்து வருகின்றனர். தொடர் மழையினால் சில பகுதிகளில் நிலசரிவு அபாயங்களும் ஏற்படுவதோடு காய்கறி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. தொடர் மழை மேகமூட்டத்தால் பகலிலே இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்குகின்றனர். மேக மூட்டத்துடன் தொடர்ந்து குளிருடன் மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.