நாகர்கோவில் பிப் 17
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரிகள் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும்
சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளதால் பிப்.25, 26 ஆகிய இரு தினங்கள் கனரக லாரிகள் போக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என
விஸ்வ இந்து பரிஷத் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விஸ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவா் காா்த்திக், மாநகர தலைவா் நாஞ்சில்ராஜா, பொதுச் செயலா் காா்கில் மணிகண்டன், செயலா்கள் ரமேஷ், காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்தள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மகா சிவராத்திரி விழா புதன்கிழமை(பிப்.26) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் சிவாலய ஓட்டம் 25 ஆம் தேதி தொடங்குகிறது. சிவாலய ஓட்டத்துக்கு பக்தா்கள் தங்களை தயாா்படுத்தி வருகின்றனா். மொத்தம் 110 கி.மீ. தூரம் இந்த சிவாலய ஓட்டம் நடைபெறும். இந்த சிவாலய ஓட்டத்தில் சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை கலந்து கொள்வாா்கள். இந்நிலையில் மாவட்டத்தில், கனிம வளம் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளால் தொடா் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சிவாலய ஓட்டத்தின்போது, பொதுமக்களுக்கும், பக்தா்களுக்கும் கனரக லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன்கருதி, பிப். 25,26 ஆகிய 2 நாள்களும் கனரக லாரிகளின் போக்குவரத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



