திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருக்காரவாசல் ஊராட்சியில், மே-1 தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், கலந்துகொண்டார்.
மே-1 உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெறும் இக்கிராமசபா கூட்டத்தில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவ ரால் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் உழைப்பினை பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரமேஷ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்பிரமணியன், வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.