ஊட்டி. டிச.09.
நீலகிரி மாவட்டத்தில் தனியார் கூட்டுறவு சங்கங்கள் பெயரில் அரங்கேறி வரும் நூதன மோசடிகள் பற்றி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறியிருப்பதாவது பல மாநில கூட்டுறவு சங்க சட்டம் 2002 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கம் என கூறி நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் தனியார் கூட்டுறவு சங்கங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவற்றில் தலைமையகம் அரியானா, ஜார்கண்ட், பெங்களூரு, போன்ற இடங்களில் இருப்பதாகவும் இதன் தமிழக கிளை அலுவலகம் கோவையில் செயல்படுவதாகவும் கூறி மாதம் ரூபாய் ஆயிரம் வீதம் ஐந்து வருடங்கள் கட்டினால் ஒரு லட்சம் கிடைக்கும் என கூறிக்கொண்டு பல ஏஜெண்டுகள் நீலகிரி மாவட்டத்தில் பல கிராமங்களில் வசூலித்து வருகின்றனர். இதேபோல் பல்வேறு விதமான கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை மூளை சலவை செய்து பணம் வசூலிக்கின்றனர். இப்படி வந்த ஒருவரிடம் திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி வந்த ஒருவர் ஐந்து வருடங்கள் முடிந்தும் பணம் கிடைக்காமல் கோவையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கேட்டு. பணம் வாங்க முடியாமல் அரியானாவில் உள்ள தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அவர்கள் குறிப்பிட்ட அப்படி ஒரு அலுவலகம் அரியானாவில் இல்லை என்று கடிதம் திரும்பி வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று உணர்ந்து நுகர்வோர் குறைதீர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இப்படி பலருடைய கோடிக்கணக்கான பணம் பறிபோய் உள்ளது. ஒருவர் மட்டுமே வழக்கு தொடுத்துள்ளார் இப்போது பெங்களூரில் தலைமை அலுவலகம் இருப்பதாக கூறிக்கொண்டு ஏஜெண்டுகள் நீலகிரி மாவட்டத்தில் வலம் வருகின.றனர். எனவே மாவட்ட மக்கள் இது போன்ற போலி நிறுவனங்களிடம் ஏமாறாமல் அஞ்சலகம், வங்கிகளில் பணத்தை சேமித்து பயனடைவதோடு இதுபோல ஏமாற்றபட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்குமாறு கேட்டுகொண்டுள்ளார்.