தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கட்சியினர் மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் பேரணியாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அருள்ராஜ் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் ரகுவரன் ஒன்றிய இணை செயலாளர் குறளரசன் மகளிர் அணி செயலாளர் பிரியங்கா ஒன்றிய துணைத் தலைவர் சர்மிளா முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் குட்டி கோபி, மாவட்ட செயலாளர் தளபதி அமீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார், மாவட்ட இணை செயலாளர் ஆதம் அறிவரசன், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முதல் மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது குறித்து மாவட்ட தலைவர் குட்டிகோபி ஆலோசனை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை பங்கேற்க செய்ய வேண்டும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மாநாட்டில் சென்று பங்கேற்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்சியினர் திறம்பட மக்கள் பணி செய்து கட்சி வளர்ச்சி அடைய பாடுபட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் கூட்டத்தில் முத்தாய்ப்பாக மாநாடு நடத்தப்படுவதை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செம்பை ஒன்றிய துணைத் தலைவர் நடராஜ் தொண்டரணி செயலாளர் சுமன், சுதாகர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக சதீஷ் நன்றி கூறினார்.



