மார்த்தாண்டம், ஏப்- 5
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போடுவதிலிருந்து விளக்கு அளித்த போலீஸ் ஏட்டு ஒருவரை ஆயுதப் படைக்கு மாற்றி குமரி எஸ் பி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மார்த்தாண்டம் அருகே அரியூர் கோணம் பகுதியில் திருட்டுத்தனமாக மண் கடத்தியதாக நாகர்கோவிலை சேர்ந்த பிபின் (36)என்பவரை கடந்த மாதம் மார்த்தாண்டம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹிட்டாச்சி எந்திரம் மூன்று டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிபினை சிறையில் அடைத்தனர். இதை அடுத்து அவர் குழித்துறை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் குழித்துறை நீதிமன்றம் விபூனுக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதையடுத்து அவர் நாகர்கோவில் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். நாகர்கோவில் கோர்ட்டு வி பினுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் மறு உத்தரவு வரும் வரை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டது.
சில நாட்கள் ஒழுங்காக போலீஸ் நிலையம் சென்று கையெழுத்து போட்ட பிபின், நாகர்கோவில் இருந்து தினமும் மார்த்தாண்டத்திற்கு வந்து கையெழுத்து போடுவது அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் ஏட்டு ஒருவரிடம் பேரம் பேசி பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி நாகர்கோவில் இருந்து தினமும் வராமல் என்றைக்காவது ஒரு நாள் வந்து விடுபட்ட நாட்களும் சேர்த்து கையெழுத்து போடுவதற்கான ஏற்பாடுகளை அந்த ஏட்டு செய்து கொடுத்துள்ளார். இதனால் விபின் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடாமல் டிமிக்கி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது தகவல் ஸ்பெஷல் டீம் மூலம் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. இதை அடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மார்த்தாண்டன் டிஎஸ்பி நல்ல சிவம் விசாரணை நடத்தினார். அப்போது போலீஸ் ஏட்டுவின் செயல் உறுதியானது. இதையடுத்து தில்லுமுல்லு செய்த போலீஸ் ஏட்டுவை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் மார்த்தாண்டம் போலீஸ் நிலைய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.