நாகர்கோவில், டிசம்பர் 8 –
நாகர்கோவில் இ பைலிங் முறையை கைவிட வலியுறுத்தி நான்காவது நாளாக இன்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் கட்டாய இ பைலிங் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், அதுவரை காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என்றும் புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி கடந்த 5ம் தேதி முதல் குமரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று 4வது நாளாக நாகர்கோவில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இ பைலிங் முறையை கைவிட வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் அசோக் பத்மராஜ் தலைமை வைத்தார். செயலாளர் டி.கே. மகேஷ் உட்பட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


