இராமேஸ்வரம், நவ. 29 –
வங்க கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளதால் பாம்பன் கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதுடன் காற்றின் வேகம் 65 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது. இதனால் பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது. மேலும் காலை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் மதுரை பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். காற்றின் வேகம் குறைந்த பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



