தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் உள்ள குண்டாறு அணையில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பில் மாவட்ட அளவிலான வெள்ள அபாய ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒருமுறை மாவட்ட அளவிலான ஒத்திகைப்பயிற்சி அனைத்து மாவட்டத்திலும் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது தேசிய பேரிடர் மீட்புப் படையின் சார்பில் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையில் 25 பேர் கொண்ட குழு பங்கேற்று வெள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்பதையும் முதலுதவி அளிப்பதையும் மிகவும் தத்ரூபமாக செய்து காட்டினர். ஒத்திகை முடிந்தவுடன் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினர்.இதில் அனை த்து வகையான பேரிடர் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்வது, முதலுதவி அளிப்பது மற்றும் பல பயனுள்ள தகவல்களை செய்முறை மூலமாக விளக்கினர் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர் பானுப்பிரியா மற்றும் பராசக்தி கல்லூரி மாணவிகள் மற்றும் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் அனைத்து துறை உயர் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.