திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை கிராமத்தில் இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
திருப்பத்தூர்:மார்ச்:20, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. மோகன்காந்தி, காணிநிலம் மு. முனிசாமி திருவள்ளுவர் பல்கலைக் கழக அலுவலக உதவியாளர் பூபதி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 2 நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து முனைவர் க. மோகன்காந்தி கூறியதாவது, திருப்பத்தூரில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் 15 ஆவது கிலோமீட்டரில் தொலைவில் அமைந்துள்ளது காக்கங்கரை என்னும் சிற்றூர். இவ்வூர் நீரோடைகள், ஏரிகள் என நீர்வளம் மிக்க ஊராக இவ்வூர் காட்சித்தருகிறது.
இவ்வூரில் ஓங்காரப்பன் என்ற பெயரில் இரண்டு நடுகற்கள் வணங்கப்பட்டு வருகின்றன. 5 அடி உயரத்தில் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் மூன்று பலகைக் கற்களை நிறுத்தி மேலே ஒரு பிரமாண்டமான பலகைக் கல்லால், கற்திட்டை வடிவில் ஓங்காரப்பன் கோயிலை வடிவமைத்துள்ளனர். கருங்கற்களாலான இக்கோயில் அமைப்புப் பழந்தமிழரின் கோயில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் இதை கற்திட்டை அமைப்பிலான கோயில்அமைப்பு என்றும் கூறலாம் இக்கோயில் உள்ளே கருவறையின் வலது பக்கத்தில் கல்வெட்டுள்ளது. மையப்பகுதியில் உள்ள நடுகல்லானது அமர்ந்த கோலத்தில் உள்ளது. இது ஆண் உருவமாகும். கும்பிடும் நிலையில் இவ்வுருவம் உள்ளது. வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டை உள்ளது. காதுகளில் குண்டலங்கள் உள்ளன.
தியானம் செய்யும் கோலத்தில் இடது கால் கீழாவும் வலது கால் மேலாகவும் வீரன் அமர்ந்துள்ளான். வீரனின் வலது பக்கத்தில் பெண் உருவம் ஒன்றுள்ளது. இந்தப்பெண் உருவம் அமர்ந்த கோலத்தில் உள்ளது. வலது காலை முழங்காலிட்டும், இடது காலை மடித்து அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது. கையில் ஒரு பூச்செண்டு போன்ற அமைப்புக் காணப்படுகிறது. இது உடன்கட்டை ஏறிய நிகழ்வைக் குறிக்கிறது. இப்பகுதியில் பகைவர்களுடன் நடைப்பெற்ற போரில் வீரமரணம் அடைந்துள்ளான் இவ்வீரன். வீரன் இறந்தவுடன் அவன் மனைவியும் அவனோடு சேர்ந்து இறந்து போன நிகழ்வை இந்நடுகற்கள் காட்டுகின்றன.
வீரனின் இடதுபுறத்தில் அமர்ந்த கோலத்தில் மனித உருவம் ஒன்று வணங்கிய கோலத்தில் உள்ளது. வீரனின் உருவத்திற்குக் கீழ்ப்பகுதியில் அவன் போருக்குப் பயன்படுத்திய குதிரையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. எனவே குதிரையில் அமர்ந்து போரிட்டு வீர மரணம் அடைந்த வீரன் இவன் என்பது புலனாகிறது. உடன்கட்டை கல் (அல்லது) சதிக்கல் என்று இதனை அழைக்கலாம். போரில் ஆண்கள் இறந்தவுடன் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை விடும் வீரப் பெண்கள் சோழர், விஜயநகர காலத்தில் ஏராளமாக இருந்துள்ளனர். இக்கல்லின் சிறப்பு அமைப்பைப் பார்க்கும் போது சோழர் காலச் சதிநடுகல்லாகத் தெரிகிறது.
இடது பக்கத்தில் அமைந்துள்ள இரண்டாவது நடுகல் வீரன், வலது கையை நெஞ்சில் வைத்துள்ளார். இடது கையில் அம்பைப் பிடித்துள்ளார். மார்பில் அம்பு பாய்ந்துள்ள தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் கொண்டையிட்டுள்ளார். இடையில் குறுவாள் ஒன்று உள்ளது. நடுகல் வீரனின் வலதுபுற மேல் பகுதியில் இவ்வீரனை இரண்டு தேவதைகள் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காட்சி உள்ளது. ஒரு உருவம் சாமரம் வீசும் காட்சியும் உள்ளது.
நடுகல் வீரனின் இடது பக்கத்தில் மேல், கீழ் என்று இரண்டு போர் மறவர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கையிலே வில் அம்புடன் நடுகல் வீரனை நேக்கி அம்பு விடுவது போல் வீரர்களின் உருவங்கள் உள்ளன. நடுகல் வீரனின் வலது பக்கக் காலுக்கு அருகே இரண்டு மாட்டின் உருவங்கள் உள்ளன.
இம்மாட்டுருவங்கள் ஆநிரைப் போரை நினைவுப்படுத்துகின்றன. தன் நாட்டுப் பசுக்கூட்டத்தை திருடிச் சென்ற பகைவர்களிடம் இருந்து, பசுக்களை மீட்டு தம் உயிரை விட்ட வீர மறவனுக்கு இந்நடுகல்லானது வைக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறுகாடு போன்ற பகுதியில் கற்களை வேலியைப் போல் அடுக்கி இக்கோயிலைக் கட்டியுள்ளனர். இக்கோயிலைச் சுற்றிலும் உள்ள நிலமானது திருப்பத்தூரில் உள்ள மூத்த வழக்கறிஞர் எஸ். எஸ். மணியன் அவர்களுக்குச் சொந்தமானது. கோயிலுக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. இக்கோயிலைச் சுற்றி சிறிய ஓடை ஒன்றும் ஓடுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு அருகே உள்ள ஏரிக்கரையில் கோயில் கட்டுவதற்கான கருங்கற்கள், தூண்கள் ஆகியவை சிதைந்த நிலையில் உள்ளன. இதன் அருகே பழமையான நந்தி சிலையும் பைரவர் சிலை ஒன்றும் உள்ளன. இப்பகுதி மக்கள் ஓங்காரப்பன் என்னும் நடுகல் தெய்வத்திற்குக் கோயில் கட்ட முடிவெடுத்துள்ளனர். இவ்வாராய்ச்சியின் போது ஊர்ப்பொதுமக்களான கே. என். சுரேஷ்குமார், ஆனந்தன், வெங்கடேசன், செல்வம், வேலாயுதம், ரகு, அர்ஜீனன், சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் தொல்லியல் துறையினர் இப்பகுதியினை ஆய்வு செய்ய வேண்டும் என தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி கூறினார்.