திருவாரூர்
ஏப்ரல் 5
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வலங்கைமான் ஒன்றியம், கீழவிடையல் ஊராட்சியில், கீழதுறையூர் மாதா கோவில் தெருவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீட்டினையும், கீழவிடையல் ஊராட்சி, கருப்பூர் கிராமத்தில் நபார்டு 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.8.04 இலட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், அதே பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், ஊரக வீடுகள் பழுது நீக்கம் (2024-2025) திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவர் வீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுது நீக்க பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலவிடையல் ஊராட்சி, மாஞ்சேரி கிராமத்தில், நபார்டு 2024-2025 திட்டத்தின் கீழ் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுவருவதையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வலங்கைமான் அரசு தலைமை மருத்துவமனையில், சித்தா பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகளை பார்வையிட்டு, மருத்துகளின் இருப்பு விவர பதிவேடுகளில் உள்ளபடி மருத்துகளின் இருப்பு விவரம் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (மகளிர் திட்டம்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வலங்கைமான் வட்டம், கோவிந்தகுடி பகுதியில் மதி வார சந்தை அமைக்கப்பட்டுள்ளதனையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் வட்டார நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளதனையும், பயனாளி ஒருவர் வீட்டில் தேனீ வளர்க்கப்பட்டுவருவதனையும் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னம்பலம், வலங்கைமான் வட்டாட்சியர் ஓம்சிவகுமாரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.