திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோட்டூர் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் பயனாளியின் குடியிருப்பு வீட்டில் பழுது நீக்கம் செய்யப்பட்டுவருவதனையும், அதே பகுதியில் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், கோட்டூர் ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இணைப்பு நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுவருவதையும், கோட்டூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் 2024-2025 கூடுதல் வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதனையும், 15வது நிதிக்குழு மான்யம் 2020-2021ன் கீழ் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் கோட்டூர் ஊராட்சி நூலகம் கழிவறை அரைக்கும் இயந்திரம் உள்ள இடத்தில் கழிவறை பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளதனையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கோட்டூர் பகுதியில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தில், ஜெனரிக், பிராண்டட் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் சர்ஜிக்கல் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.
பனையூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பயனாளி ரூ.7.38 இலட்சம் மதிப்பீட்டில் வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதனையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வில், மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தி, கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், அன்பழகன், கோட்டூர் உதவிபொறியாளர்கள் மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.