நாகர்கோவில் டிச 11
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் எனது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடிக் கம்பம் அமைத்து கொடியேற்றுவதற்கு காவல்துறையினர் பலவகையிலும் முட்டுக்கட்டைப் போடுகின்றனர். இதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
நடப்பு 2024 ஆம் ஆண்டில் மட்டும், 150க்கும் அதிகமான தலித் மக்களின் படுகொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தலித் சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய பொறுப்புகளில் இருக்கும் விசிக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குப் போடுவது அதிகரித்து வருகிறது. அரசியல் ரீதியான தொடர் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் இப்படியான ஜனநாயக விரோதப் போக்கில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அவசர செயற்குழுக் கூட்டம் தன் கண்டனத்தை தெரிவிக்கிறது. அதேநேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மூன்றின் மீதும் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.