ஈரோடு, பிப் 2-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோட்டில் முஸ்லிம் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதைத்தொடர்ந்து காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-
ஈரோட்டை பொறுத்தவரை பெரியாரும், இங்குள்ள முஸ் லிம்களும் இணைந்து வாழ்ந்துள்ளனர். நாங்கள் பெரியாரை மதிக்கக்கூடியவர்கள். அதுபோல் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தி.மு.க.வுடன் நாங்கள் கொள்கை ரீதியான கூட்டணியாக செயல்படுகிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளோம். வக்பு வாரிய மசோதா திருத்தங்களுக்கான கூட்டுக்குழுவில் 26 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 16 பேர் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். 10 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அந்த கூட்டுக்குழுவில் இருந்து வெளியே வந்து விட்டனர். இவர்கள் கூறிய ஒரு திருத்தங்கள் கூட ஏற்கப்பட வில்லை. மாறாக பா.ஜனதா கட்சியினர் அவர்களோடு கூட்டணியில் உள்ளவர்கள் கூறிய திருத்தங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு 44 திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் ரெயில்வே ராணுவ சொத்துக்கு அடுத்தபடியாக அதிகம் உள்ளது வக்பு சொத்துகள். அந்த சொத்துகளை பா.ஜனதா ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்து அரசு சொத் துகளாக மாற்ற சதி திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதை எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.