கன்னியாகுமரி ஜூலை 30
சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவா் சிலை அமைந்துள்ள பாறை ஆகியவற்றை இணைக்கும் இணைப்புப் பால ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு.
சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவா் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
கன்னியாகுமரி கடலில் இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை
ஆகியவற்றை பூம்புகார் போக்குவரத்து கழக படகில் சென்று சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு தளம் ஆழம் அதிகமான பகுதியில் உள்ளது. திருவள்ளுவர் சிலைக்கான படகு தளம் ஆழம் குறைவானதாகவும், அதிகப்படியான பாறைகள் நிறைந்த இடமாகவும் உள்ளது. ஆகவே கடலில் நீர் மட்டம் குறையும் போது திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
இதனால் ஆண்டின் பாதி நாட்கள் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று காண முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழ் அமைப்பினரும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலைக்கு இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் தமிழ்நாடு கடல்சார் வாரிய வைப்பு நிதியாக ₹37 கோடி நிதியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமைச்சர் மனோதங்கராஜ் முன்னிலையில் அமைச்சர் எ.வ.வேலு கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு பாறையின் பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள தூண்கள் இடையே தற்போது சாரம் போன்ற அமைப்பை கட்டமைக்கும் பணி நடக்கிறது. இது முடிந்ததும் ஒரு வாரத்தில் கண்ணாடி கூண்டு பாலம் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிகிறது.