நாகர்கோவில் மார்ச் 2
குமரி மாவட்ட செயலாளர் தா.சுபாஷ் சந்திரபோஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சித்தன், கதிரவன் ஆகியோர் கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரி (W.P.29035/2024) அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் நீதியரசர் வழக்குக்கு சம்மந்தமில்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள்,மாநில சாலைகள், உள்ளுர் சாலைகளில் உள்ள அனைத்து கொடிகம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற உத்திரவிட்டது ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றுகின்ற அரசியல் கட்சிகளை கவலை அடைய வைத்துள்ளது.
போக்குவரத்து தடை ஏற்படுகின்ற கொடிகம்பங்களை மாற்றுவதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை.
கொடி என்பது ஒரு இயக்கத்தின் கொள்கை, கோட்பாடு, தியாகம்,
போராட்டங்களின் வெளிப்பாடு, தொழிற்சங்க கொடிகள் வர்க்க போராட்டத்தின் வரலாறு.
இந்த கொள்கைகளை வெளிபடுத்தும் கொடி கம்பங்களை அப்புறப்படுத்துவது அரசியல்
சாசனம் வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன நெறிமுறை
மற்றும் அரசியல் சாசனத்தின் 19(1) பிரிவுக்கு எதிரானது.
கொடியும், கொடி கம்பமும் நம் தொன்மத்தின் அடையாளங்கள். ‘ஓங்கி வளர்த்ததோர் கம்பம்’ என்பதும் “கொடி காத்த குமரன்” என்பது நமது வரலாறு. கொடிகள் இந்திய தேசத்தின் பன்முக தன்மையை பறைசாற்றுவது. தேவையற்ற வியாக்கியானங்களால் நடைமுறைபடுத்த முடியாத தீர்ப்புகள் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தோற்றுவித்து தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்திவிடும்.
2019-ம் ஆண்டு, 2020-ம் ஆண்டு இதுபோன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டு நடைமுறைபடுத்த முடியாமல் நிலுவையில் இருக்கும்போது, நாளை தமிழகத்திலுள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற உத்திரவிட்ட கூடிய முன் உதாரண தீர்ப்பாக இது அமைந்துவிடக்கூடாது. எனவே, தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், தமிழ் பண்பாட்டை சீர்குலைப்பதை தடுத்திட உறுதியாக இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திட நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.