கோவை, நவ. 3 –
கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மூன்று பேர் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி அந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்றுள்ளனர். அப்பொழுது இருவரும் தப்பிக்க முயற்சித்த நிலையில் கார் கண்ணாடிகளையும் உடைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மூன்று பேர் தாக்கியதில் அந்த ஆண் நண்பர் பலத்த காயமடைந்த நிலையில் அந்த கல்லூரி மாணவியை சுமார் 500 மீட்டர் தொலைவில் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
ஆண் நண்பர் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் ஆண் நண்பரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பலத்த காயங்களுடன் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 7 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து அந்த மூன்று பேரை பீளமேடு காவல்துறையினர் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.



