நாகர்கோவில், டிச. 22 –
கிறிஸ்துமஸ் பண்டிகை:-
பண்டிகை நாட்கள் என்றாலே அனைவர் மனதிலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலக நாடுகளில் உள்ள கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை வருடத்தின் இறுதி மாதம் டிசம்பர் 25 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டிசம்பர் மாதம் பிறந்த முதல் நாளிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி விடுவார்கள். கடைகளில் விதவிதமான ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரம், கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், தோரணங்கள் விற்பனைக்கு குவிந்து டிசம்பர் முதல் நாளிலேயே அனைவரையும் மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வீடுகளில் ஸ்டார்கள் தொங்கவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பண்டிகை நாட்களில் முதலாவதாக வீடுகளில் ஸ்டார்கள் (நட்சத்திரங்கள்) தொங்கவிட்டு, சிறிய அளவிலான வண்ண விளக்குகளால் வீடுகளை அலங்கரித்து இயேசுவின் பிறப்பின் சந்தோஷத்தை அனைவருக்கும் தெரிவிப்பார்கள். தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் பவனி சென்று பாடல்கள் பாடி இனிப்புகள் வழங்கி இயேசுவின் பிறப்பின் சந்தோஷத்தை அறிவிப்பார்கள். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள் கொடுத்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
வீடுகளில் ஏன் ஸ்டார் கட்டுகிறோம்:-
யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தார்கள். சாஸ்திரிகள் வானியலில் நிகழும் அதிசயங்களை ஆராய்ச்சி செய்வதில் மிகுந்த ஞானமுள்ளவர்களாக இருந்ததோடு மிகுந்த செல்வந்தர்களாக இருந்தார்கள். சாஸ்திரிகள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் யூதர் குலத்தில் பிறந்த ஒரு மாபெரும் அரசரைக் குறிக்கிறது என்று இறைவனுடைய சக்தி ஞானிகளுக்கு உணர்த்தியபடியால் அந்த நட்சத்திரத்தைக் கண்டு அவர்கள் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்து அரசரை பணிந்து கொள்ள வந்தார்கள்.
அந்த நட்சத்திரம் (இயேசு) அரசர் பிறந்த இடத்தில் மேல் வந்து நிற்கும் வரைக்கும் சாஸ்திரிகளுக்கு வழிகாட்டியாக முன் சென்றது. சாஸ்திரிகள் மாட்டு தொழுவத்தில் உள்ள கொட்டகையில் பிரவேசித்து இயேசுவையும் அவரின் தாயாகிய மரியாளையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களை திறந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் பிறந்த இயேசுவிற்கு முன் பரிசாக வைத்தார்கள். இவ்விதமாக நட்சத்திரம் இயேசு கிறிஸ்து பிறந்த போது வழிகாட்டியாகவும் அரசர் பிறப்பின் செய்தியையும் வெளிப்படுத்துகிறது.
அன்பு நண்பர்களே! சாஸ்திரிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை போன்று நாமும் பிறருக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக இருந்து இறைமகன் இயேசுவிடம் செல்லும் வழியாக இருப்போம்! உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு பண்டிகை நல்வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்



