மதுரை ரயில்வே ஊழியர் குழந்தைகள் 76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை.
மதுரை ரயில்வே ஊழியர்களின் 76 குழந்தைகள் 76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு 76 நிமிடங்களில் தங்கள் வேடம் கொண்ட தலைவர்களைப் பற்றி விளக்கம் அளித்தனர். இந்த சாதனை பாண்டிச்சேரி பிரிவு அகில இந்திய சாதனைப் பதிவு புத்தகத்தில் பதிவு பெற்றது.
இந்திய திருநாட்டின் 76 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் காந்திஜி, நேருஜி,
நேதாஜி, வல்லபாய் படேல், மருதுபாண்டியர், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருதநாயகம், ராணி மங்கம்மாள் போன்ற 76 வேடங்களில் ரயில்வே காலனி செம்மண் திடலில் கம்பீர நடை போட்டனர். தலைவர்கள் வேடங்களில் 76 பேரும் இந்தியா போன்று வடிவமைப்பில் நின்று காட்சி கொடுத்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியை மதுரை ரயில்வே கோட்ட பெண்கள் நலச் சங்கத்தின் தலைவியும், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவாவின் மனைவியுமான திருமதி பிரியா அகர்வால் ஏற்பாடு செய்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். திருமதி பிரியா அகர்வாலுக்கு பாண்டிச்சேரி பிரிவு அகில இந்திய சாதனை பதிவு புத்தக நிர்வாகம் சார்பாக சாதனை பெண்மணி விருது வழங்கப்பட்டது. விழாவில் அகில இந்திய சாதனை புத்தக தலைமை நிர்வாக அதிகாரி வெற்றி, ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, ரயில்வே பள்ளி ஆசிரியர் எம். தமிழ்ச்செல்வன், ரயில்வே ஊழியர் நல ஆய்வாளர்கள் நீல மணிவண்ண கண்ணன், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.