தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய இண்டூர், பாலவாடி, இலக்கியம்பட்டி நியூ காலனி, அதியமான் கோட்டை அவ்வை காலனி, நல்லம்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாம்களில் உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு 208- பயனாளிகளுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பிலான அரசு நல்ல திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் அமைச்சர் பேசியதாவது. தருமபுரி மாவட்டத்தில் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாக சேர்ந்திட மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நகரப் பகுதிகளில் நடைபெற்ற17- முகாம்களின் மூலம் பெறப்பட்ட 13,942 மனுகளுக்கும், இரண்டாவது கட்டமாக ஊரகப் பகுதிகளில் நடைபெற்ற 70- முகாம்களின் மூலம் பெறப்பட்ட 48, 057 மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளால் உரிய முறையில் பரிசீலனைசெய்யப்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாம்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கிய 1554- பயனாளிகளுக்கு ரூ.9.22 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 16 அரசு துறைகள்மூலம் கலைஞர் மகளிர் உரிமை த்தொகை, பட்டா மாறுதல் இ – பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தொழில் முனைவோர் வங்கி கடன் உள்பட 44 வகையான சேவைகளின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த அனைத்து மனுகளுக்கும் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும். இம் முகாம்களில்
பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இந்தியாவில் பெண்கள் அதிக படித்த மாநிலமாகவும், அண்டை மாநிலத்தை விட கல்வியில் சிறந்த விளங்குகிற மாநிலமாகவும், தமிழ்நாடு உள்ளது. கல்வியில் இத்தகைய உயர்ந்த நிலையை எட்டியுள்ள புகழ் மீண்டும் தொடர்ந்திட பொதுமக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வழங்குவதை அவர்களுடைய கடமையாக கருத வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த முகாம்களில் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார்கள் சண்முகசுந்தரம், சிவகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் ,தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.