சென்னை, டிச. 08 –
தென்னிந்தியாவின் தொழிலதிபர், வள்ளல் மற்றும் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் புரவலராகத் திகழ்ந்த காலம் சென்ற ஸ்ரீ பொட்டிப்பட்டி ஓபுல் ரெட்டியின் (1925–2025) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய அஞ்சல் துறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு ‘மை ஸ்டாம்ப்’ அஞ்சல் தலையை வெளியிட்டது.
சென்னையில் நடைபெற்ற சிறப்பு நூற்றாண்டு விழாவில், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி முன்னிலையில் சென்னை அஞ்சல் சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ். எம் இந்தத் தபால் தலையை வெளியிட்டார்.
ஸ்ரீ பி. ஓபுல் ரெட்டி ஒரு தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தொழில்துறையின் ஜாம்பவான் ஆவார். 1972-ல் ஜப்பானின் மட்சுஷிடா (பானாசோனிக்) – [Matsushita (Panasonic)] நிறுவனத்துடனான இவரது முன்னோடித்துவமிக்க கூட்டு செயல்பாடு, ‘இந்தோ நேஷனல் லிமிடெட்’ (நிப்போ பேட்டரிஸ்) நிறுவனம் உருவாக வழிவகுத்தது. இவரது தலைமையின் கீழ், நிப்போ (Nippo) இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ‘டிரை-செல்’ (dry-cell) ப்ராண்ட்களில் ஒன்றாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. ‘நிப்போ ஹைப்பர்’ மற்றும் ‘நிப்போ ஸ்பெஷல்’ போன்ற புதுமையான தயாரிப்புகளை இவர் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் புகழாரம்:
அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி பேசுகையில், “ஸ்ரீ பி. ஓபுல் ரெட்டி தொழில்துறையில் முன்னோடித்துவமிக்க தொலைநோக்கு, எல்லோரிடத்திலும் அன்பு காட்டும் மனிதநேயம் மற்றும் ஆழ்ந்த கலாச்சார ஈடுபாடு ஆகியவற்றின் அரிய கலவையாகத் திகழ்ந்தார். தொழில் ரீதியாக, அப்போலோ மருத்துவமனையின் ஆரம்ப கால இயக்குநர்களில் ஒருவராக அவர் எங்களுடன் கைகோர்த்து நின்றார்.
இந்தோ நேஷனல் கூட்டுமுயற்சியில் அவர் ஆற்றிய பணியையும், நேர்மையையும் நோக்கத்தையும் முன்னிறுத்தினால் இந்தியத் தொழில் துறை எதையும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டியது. அவரது ஈகைக் குணம், கர்நாடக இசையின் மீதான அவரது பற்று போன்ற குணங்கள் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதில் அவருக்கிருந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கின்றன. இந்த நூற்றாண்டு விழா அவரை நாம் மனதார நினைவு கூரும் தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் அழகாக வெளிப்படுத்திய மதிப்புகளின்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒரு புதிய அழைப்பாகும்” என்றார்.



