நாகர்கோயில் – ஆக – 20,
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் களியல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கேரளா எல்லையோரமாக அமைந்துள்ள கடையால் பேரூராட்சி பகுதியில் வருகின்ற ஆறு காணி என்ற ஊரைச் சார்ந்த மக்கள் தங்களுடைய கைவசம் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க கேட்டு கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட் சேகர் தலைமையில், வார்டு கவுன்சிலர் பெமினா பெர்லின் ஜாய் முன்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். ஆர் . சேகர், மாவட்ட செயலாளர் ஆர். ரவி ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கடையால் – களியல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பெரும்பாலான ஊர்கள் முற்றிலும் பஞ்சாயத் அளவில் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை கொண்டதாகவும் மலைப்பகுதிகளையும் ரப்பர் தோட்ட காடுகளையும் உள்ளடக்கியதுமான கேரளா எல்லை ஓரமாக உள்ள தமிழகத்திலேயே பரப்பளவில் மிகப்பெரிய பேரூராட்சி ஆகும் மாவட்டத்தில் உள்ள மொத்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் தொகையில் 55 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இப்ப பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் தான் வசித்து வருகிறார்கள்,
கடையால் பேரூராட்சி பகுதிக்குள் சிற்றார் அணை I, மற்றும் அணை 2, பேச்சுப் பாறை அணையில் ஒரு பகுதி நீர் பிடிப்பு பகுதிகளும் வருகின்றன. பரப்பளவில் பெரியதாக இருந்தாலும் மிகவும் ஏழைகளாக உள்ள பெரும்பாலான மக்கள் பல்வேறு வகைப்பட்ட புறம்போக்கு நிலங்களில் தான் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். பெரும் முதலாளிகளான ரப்பர் தோட்ட உரிமையாளர்கள் எவ்வித இறக்கமும் இல்லாமல் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய இடத்தையும் அபகரித்து அவர்களுடைய நிலங்களோடு சேர்த்துக் கொண்டு விடுகின்றனர் என்பது மட்டுமல்ல அபகரிக்கப்பட்ட நிலங்களில் அணைக்கட்டு பகுதிகளும் அடங்கும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
மேற்கண்டவாறு சொத்துக்களை விரிவுபடுத்தி செல்வ செழிப்பில் ரப்பர் எஸ்டேட் உரிமையாளர்கள் திளைக்கும் போது , மறுபுறத்தில் இதே பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களோ கடந்த 90 ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வருகின்ற குடியிருப்புடன் கூடிய நிலங்களுக்கு பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்து வருவதையும் போராடி வருவதையும் பார்க்கின்றோம் ஏழைகளால் கொடுக்கப்படும் மனுக்களின் ஓரத்தில் ஆட்சியர் அல்லது வருவாய்த்துறை அலுவலர்கள் இனிசியல் போட்டி விசாரணை மற்றும் அறிக்கை தர வேண்டும் என்று விளவங்கோடு வட்டாட்சியருக்கு அனுப்புகிறார்கள் வட்டாட்சியர் நில அளவைரிடம் அம்மனுவை கொடுத்து கிராம அலுவலருமாக சேர்ந்து நிலத்தை அளந்து சுத்தப்படுத்த கேட்டுக்கொள்கிறார் அவரோ அந்த மனுவை பணம் பெறுவதற்கான ரசீதாக கருதி கிராம அலுவலரையும் சேர்த்து கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரரிடமிருந்த எவ்வளவு அதிகபட்சமாக கிடைக்கிறதோ ! அவைகளை பெற்றுக் கொள்கின்றனர் . தப்பி தவறி அந்த இடம் எங்களது தோட்டப் பகுதியோடு சேர்ந்தார் போலுள்ளது என்று ரப்பர் தோட்ட முதலாளி சொன்னாலே போதும், ஏழை மனுதாரருக்கு பட்டா கிடைக்காது ! இவ்வாறான கொடுமைகள் கடந்த பல்வேறு ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற வாடிக்கையான நிகழ்வுகளாகும் .
அது போன்று வலிய ஏலா பகுதி:
நாடு சுதந்திர பொன்விழா ஆண்டையும் கடந்து செல்லும் நேரத்தில் இங்கே தமிழகத்தில் – குமரி மாவட்டத்தில் , கடையால் பேரூராட்சி பகுதியிலுள்ள வலிய ஏலா வனத்துறை என்ற இலாகா அமைக்கப்படுவதற்கு முன்னரே அல்லது நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே அப்பகுதியில் குடியேறியவர்கள் தான் வலிய ஏலா மக்கள் என்பதை கவனத்தில் கொண்டு தேவையான விசாரணை நடத்தி அம்மக்களுக்கு மின் இணைப்பு மற்றும் பட்டா வழங்கவும் கடையால் பேரூராட்சி வாயிலாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அனுமதிக்க வேண்டியும் அவர்கள் அளித்த மனுவில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது.