திருவட்டாறு, பிப்-12
குமரி மாவட்டம் மாத்தூரில் ஆசியாவில் மிக உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளது. இது கடந்த 1969 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் இரு மலைகளை இணைத்து அமைக்கப்பட்டதாகும். பேச்சிப்பாறை சிற்றாறு அணை நீர்கள் இந்த கால்வாய் வழியாக பாசனத்துக்கு திறந்து விடப்படுகிறது.
இந்த தொட்டி பாலத்தை காண இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்த பாலத்தின் நுழைவு பகுதியில் காமராஜர் உருவம் படம் பதிக்கப்பட்ட அடிக்கல் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று 11-ம் தேதி காலையில் காமராஜர் உருவம் பதித்த அடிக்கல் உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து உடனடியாக அப்பகுதியினர் திருவட்டாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான மாத்தூர் தொட்டி பாலத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களும் இயங்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.