சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ராமநாதபுரம், டிச.4-
தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் முதல் இடம் பெற்று சாதனை படைத்து மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனர். சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
தொண்டி செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பாராட்டியும், பரிசளிக்கும் நிகழ்வு பள்ளி மேலாண்மை குழு சார்பில் அதன் தலைவர் ஏ.ஹமீது பாத்திமா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் முன்னாள் மாணவரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான எம்.சாதிக் பாட்ஷா, கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் இனிகோ, பட்டதாரி ஆசிரியர் காளிராஜ், உடற்கல்வி ஆசிரியர் சிவாகாமாட்சி பாலன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அஸ்மத் பானு, ஷகிலா பானு மற்றும் ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் சிவாகாமாட்சி பாலன் நன்றி கூறினார்.