காஞ்சிபுரம் மே 12
காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையேற்று ரத்த தானம் வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாள் விழாவை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் போர் பதற்றம் காரணமாக தனது பிறந்தநாளை ராணுவ வீரர்களும் பொதுமக்களும் நலமுடன் இருக்க வேண்டி கோவில்களில் பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி சார்பில் காஞ்சிபுரம் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கெளதம் ஏற்பாட்டின் பேரில் நடந்த இந்த முகாமில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா ஆகியோர் உட்பட ஏராளமான அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.