கிருஷ்ணகிரி அக்.19,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த சாலாமரத்துப்பட்டி சந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவருக்கு கஸ்தூரி (42) என்கிற மனைவியும், கௌதம் (23) மற்றும் தஜித் (21) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். கெரிகேபள்ளி கேட் கூட்டுறவு வங்கியில் வங்கி செயலாளராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணன், நேற்று முன்தினம் (16.10.2024) வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு, டவுன்பஸ் பிடித்து வீடு திரும்பியுள்ளார். கும்மனூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கியபோது, அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி (30) என்பவர் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் மோதிய நபரை கைது செய்யக்கோரி கிருஷ்ணனின் உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், நேற்று மதியம் வரை கல்லாவி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், தருமபுரி- ஊத்தங்கரை நெடுஞ்சாலையில், கும்மனூர் பேருந்து நிறுத்தம் அருகே பிணத்தை சாலையில் போட்டு 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு. அப்போது அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன், ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, மோதிய நபரை கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.