ராமநாதபுரம், மார்ச் 7-
மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மும்மொழிக்கொள்கை அவசியத்தை வலியுறுத்தி பாஜக சார்பில் கையெழுத்து இயக்கத்தை மாநில பொதுச் செயலர் பொன்.பாலகணபதி தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில்,
தமிழகத்தில் மும்மொழி கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு மொழிக்கொள்கையால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, மும்மொழிக்கொள்கையை கற்பதலால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு திரட்ட உள்ளோம். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் ஹிந்தி மொழியை வசதி படைத்தோரின் பிள்ளைகள் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். கல்வி கற்பதில் நிலவும் இத்தகைய பாகு பாட்டை போக்க அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மும்மொழி கற்க வேண்டும் என்ற நோக்கில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதை பாஜக வலியுறுத்துகிறது. மும்மொழிக் கொள்கையை தடுக்க இந்தி திணிப்பு எனும் தவறான கருத்தை தமிழக மக்களிடம் திமுக பிரசாரம் செய்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக மொழி கற்றுக் கொண்டால் தங்கள் கல்வி நிறுவனத்திற்கு மாணவர் சேர்க்கை குறைந்து விடும் என்பதால் தான் மும்மொழிக் கொள்கைக்கு இந்தி திணிப்பு என்ற தவறான எண்ணத்தை திமுக பிரசாரம் செய்து வருகிறது. மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அதையும் மீறி நடத்துவோம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்டத் தலைவர் முரளிதரன், ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர் குமார், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் நாகேந்திரன், ஓ பி சி அணி முன்னாள் மாநில செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, வழக்கறிஞர் சண்முகநாதன், ஊடகப்பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் குமரன் உள்பட பலர் பங்கேற்றனர்.