ராமநாதபுரம், மே 6-
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என மாநில நிர்வாகி லெட்சுமணன் கூறினார்.
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் தனியார் மகாலில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் தொழிற்சங்க மாநில நிர்வாகக்குழு செயலாளர் லெட்சுமணன்
தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முத்துச் செல்வன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு பின்னர் மாநில நிர்வாகி லெட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கல்வி, வேலை வாய்ப்பில் அருந்ததியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். அருந்ததியர் நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் சுதந்திர போராட்ட தியாகி பொல்லான் க்கு அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும். பணியில் இருக்கும் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி துரிதமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2024 நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவை, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்து ஆதரவு அளிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார், மகளிரணி செயலாளர் காளியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



