நாகர்கோவில் ஆக 22
குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது ஒரு சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கன மழை இடைவிடாது இரவும் முழுவதும் கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலமோரில் அதிகபட்சமாக 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கோழிப்போர் விளை, குழித்துறை, ஆணைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மலையோர பகுதிகளில் கொட்டிய மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மோதிரமலை-குற்றியாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. ஏற்கனவே அந்த பகுதியில் பழைய பாலத்தை மாற்றிவிட்டு புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது.
தற்காலிக பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றதால் குற்றியாருக்கு சென்ற பஸ் திரும்பி வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. கிழவி ஆறு, தச்சைமலை உள்பட 12 மலையோர கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தற்காலிக பாலத்தை சீரமைத்தால் மட்டுமே கிராம மக்கள் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குற்றியாறில் நிறுத்தப்பட்டுள்ள பஸ் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான குளிர் காற்று வீசுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக இருந்தது. அணைக்கு 1346 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 579 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீராக 753 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.05 அடியாக உள்ளது. அணைக்கு 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1-நீர்மட்டம் 13.87 அடியாக உள்ளது. அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.