நாகர்கோவில் ஜூலை 24
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் சத்துணவு துறையின் கீழ் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட பேயன்குழி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கல்குறிச்சி அரசு உதவி பெறும் பள்ளியான புனித ஜோசப் நடுநிலைப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கு காலை உணவு வழங்குவது குறித்த தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை அறிவித்து, அத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான கடந்த 15.07.2024 அன்று தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
அதனடிப்படையில்
ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்கிடவும். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கி, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பள்ளி வருகையை அதிகரித்திடும் விதமாகவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுபள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஊரக பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் அனைத்து பணி நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சிறப்பு திட்டங்களையும் பொதுமக்கள். மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.