தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரே நாளில் 2,04,650 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
இது தொடர்பாக துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மொத்த சரக்குகளை கையாளும் தளங்களான வடக்கு சரக்குதளம் 2-ல் 120- டன் திறன் கொண்ட 2 நகரும் பளுதூக்கிகள் மற்றும் சரக்குதளம் 1 முதல் 5 வரை 3 நகரும் பளுதூக்கிகளும் சுழற்சி முறையில் செயல்பட்டு ஒரு நாளைக்கு 45,000 டன் சரக்குகளை வெளியேற்றுவதற்கு வசதியை பெற்றுள்ளது.
மேலும் மொத்த சரக்குகளை அதிகமாக கையாளுவதற்கு வசதியாக 240 மீட்டர்நீளமுடைய இணைப்பு கன்வேயர் செயலியை, தூத்துக்குடி அனல்மின் உற்பத்தி நிலையத்தின் கன்வேயர் செயலியுடன் இணைத்து நிலக்கரி சேமிப்புகிடங்கு வரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் வ.உ.சி.துறைமுகத்தில் நிலக்கரி கையாளும் திறன் வருடத்திற்கு 7 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வ.உ.சிதம்பரனார்துறைமுகத்திற்குள் 3,85,136 சதுர மீட்டர் நிலப்பரப்பினை நிலக்கரி சேமிப்பதற்காகவும் மற்றும் 1,24,309 சதுர மீட்டர் நிலப்பரப்பினை சுண்ணாம்புகல் சேமிப்பதற்காகவும் ஒதுக்கி அதனை விநியோகம் செய்யும் வசதியினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வடக்கு சரக்குதளம் -2 ல் கனரக வாகனங்கள் சென்றுவருவதற்கு வசதியாகவும் மற்றும் சரக்கு சேமிப்பதற்காகவும் 1700 சதுரமீட்டர் நிலப்பரப்பினை உருவாக்கியுள்ளது.வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் -2 மற்றும் நிலக்கரி தளம் -2ல் கையாளக் கூடிய மொத்த சரக்குகளுக்கான கையாளும் கட்டணத்தில் சலுகைகள் அறிவிக்கபட்டுள்ளது. இச்சலுகை திட்டத்தில் மொத்த சரக்குகளை கையாளுபவர்களின் செலவினை குறைப்பதற்கு வசதியாக அமைய பெற்றுள்ளது. இச்சலுகை திட்டத்தின் முழு விவரங்களை வ.உ.சிதம்பர னார் துறைமுக இணைய தளம் https://vocport.gov.inல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில் வடக்கு சரக்குதளம் 3-ன் மிதவை ஆழத்தினை 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி கூடிய விரைவில் நடைபெற உள்ளது என்று கூறினார். வடக்கு சரக்குதளம் -3-ஐ ஆழப்படுத்தப்பட்ட பின் மொத்த சரக்குகளை நகரும் பளுதூக்கிகள் மூலம் கையாளப்படும் என்று கூறினார்.
வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை வெளியேற்றத்திற்கு வசதியாக JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வடக்கு சரக்கு தளம் -3 ஐ முழுவதும் இயந்திரமயமாக்கும் திட்டமானது டிசம்பர் 2026 வருடத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.