கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளத்தில் இருந்து களியன்காடு செல்லும் சாலையில் நேற்று அதிகாலை ரத்தக்காயுடன் ஒருவர் கிடப்பதாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் வந்துள்ளது. அதன் பெயரில் அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடப்பதை பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . அதன் பேரில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்லிஸ்கிங்ஸ் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடப்பவர் யார் ? என விசாரணை நடத்தினர் அப்போது அந்த இடத்தில் வெடிமருந்து வாசம் அடித்துள்ளது.
எனவே பிணமாகக் கிடந்தவர் வெடி வெடித்து பலியாகி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கினர். அதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிணமாகக் கிடந்தவர் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் சரவிளையைச் சேர்ந்த ராபின்சன் ( வயது 45 ) என தெரிய வந்தது .
இவருக்கு இறச்சகுளம் பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது அங்கு பன்றிகள் நுழைந்து விளைபொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த பன்றிகளை கட்டுப்படுத்த ராபின்சன் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்றிருக்கலாம் ஆனால் வழியில் அவை வெடித்து அவர் உடல் சிதறி பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் பன்றிகளை கட்டுப்படுத்த தான் வெடிகுண்டுகள் கொண்டு சென்றாரா ? அல்லது வனவிலங்குகள் வேட்டையாட எடுத்து சென்றாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்திய போது அஜய் என்பவர் சிக்கினார். அவரும் காயத்துடன் இருந்துள்ளார் எனவே அவர் ராபின்சன்னுடன் வந்து இருக்கலாம் வெடிவிபத்தில் அவர் காயம் அடைந்து இருக்கலாம் அதன் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்திருப்பார் என போலீசார் கருதுகின்றனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.