ராமநாதபுரம், ஜுலை 22-
இராமநாதபுரத்தில் தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது.

மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாநிலச் செயலாளர்கள் அடையாறு பாஸ்கரன், ஆனந்தகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேலுச்சாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன், செல்லதுரை அப்துல்லா, தெய்வேந்திரன், பாரி ராஜன், செந்தாமரைக்கண்ணன், சரவண காந்தி, ஜோதி பாலன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட சார்பு அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்,
வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவி நிரப்பாமல் நீண்ட காலமாக காலியாக உள்ளது. விரைவில் மாவட்ட தலைவர் நியமிக்க வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பகிரங்கமாக கேள்வி எழுப்பி பேசினார். கூட்டத்தில் இருந்த ஒட்டுமொத்த நிர்வாகிகள் ” ஆமாம் உடனடியாக மாவட்ட தலைவர் நியமிக்க மாநில தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குரல் எழுப்பினர்.
அதனை தொடர்ந்து மாநில தலைவர் செல்வ பெருந்தகை பேசும்போது, ” ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வரலாற்று சிறப்புமிக்க வீரம் மிகுந்த மாவட்டம். இங்கு அனைவரும் ஒரே கருத்தை சொல்கிறீர்கள். மாவட்டத் தலைவர் வேண்டும் என்று… என்னுடைய கோரிக்கையும் அதுதான். தற்போது தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மாவட்டத் தலைவர் பதவி காலியாக உள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரை யாரும் ராஜினாமா செய்ய கூறவில்லை. தற்போது ஒருவரை பரிந்துரை செய்துள்ளீர்கள் இதை நான் மேல் இடத்தில் கூறி விரைவில் உங்கள் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் நியமனம் செய்து விடுவோம் ” என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி இராமநாதபுரம் மாவட்ட செய்தி தொடர்பாளர் வாணி இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி நன்றி கூறினார்.