நாகர்கோவில், ஆக. 09 –
குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பீகாரில் பி.ஜே.பி அரசு அமைய சீர்திருத்தம் என்ற பெயரில் தேர்தல் கமிஷன் எடுத்து வரும் சட்டத்துக்கு புறம்பான செயலை கண்டித்தும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பஜ்ரங்தள் அமைப்பின் பொய் புகார் மீது அருள்சகோதரிகள் மீது புனைய பெற்ற பொய் வழக்கை திரும்ப பெற கோரியும், பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தர்மஸ்தாலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆணவ கொலையை தடுக்க சட்டமியற்ற கோரியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து வரலாற்றை திரிக்கும் ஒன்றிய பி.ஜே.பி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் தோழர் கே. நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பி. தாமரைசிங், மாவட்டக்குழு உறுப்பினர் வி. அருள்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அனில் குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுந்தரம், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் ஆர். செல்வராணி, தோவாளை தாலுகா செயலாளர் கல்யாண சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் சி. வாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தா. சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஜி. சுரேஷ் மேசிய தாஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். நாகர்கோவில் மாநகர பொருளாளர் சி. நாகப்பன் நன்றி கூறினார்.