சென்னை, ஆகஸ்ட் 07 –
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஆணவ படுகொலைகளை கண்டித்தும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை தலைவர் எம்.பி ரஞ்சன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு, செய்தி தொடர்பாளர் கோபண்ணா, சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், இதயத்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கே.வி. தங்கபாலு செய்தியாளர்கரிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலை சம்பவங்கள் வேதனையளிக்க கூடியதாக உள்ளது. சமீபத்தில் கவின் என்ற இளைஞர் இதற்கு இலக்காகியிருக்கிறார். இது போன்ற கொடுமைகள் நடக்காத வண்ணம் தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பாக நடக்கும் உண்ணாவிரத நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு முன் மாதிரி திட்டங்களை கொண்டு வரும் தமிழக முதல்வர் தனி சிறப்பு சட்டத்தை கொண்டு வருவார் என்று நம்பிக்கை கொள்கிறோம் என்றார்.