குளச்சல், ஆக. 6 –
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் பிளஸ் ஒன் படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கும் நாகை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே குமரியை சேர்ந்த சிறுமியின் தந்தை மது குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுமி தனது வீட்டில் நடக்கும் பிரச்சினை குறித்து தோழியிடம் கூறியுள்ளார்.
இதை கேட்ட நாகை தோழி தனது வீட்டுக்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த வருடம் மார்ச் மாதம் குமரியை சேர்ந்த சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி நாகையில் உள்ள தோழி வீட்டுக்கு சென்றார். அங்க 3 வாரம் தங்கி இருந்தபோது குமரி மாவட்ட சிறுமிக்கும் தஞ்சாவூரை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சிறுவன் நாகை சிறுமியின் நண்பன் ஆவார்.
இதனால் சிறுவன் குமரியை சேர்ந்த சிறுமியை பார்ப்பதற்காக நாகைக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமரியை சேர்ந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி சொந்த ஊருக்கு வந்துள்ளார். மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாகை சிறுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. தோழியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குமரி சிறுமி நாகைக்கு இரண்டாவது முறையாக சென்றுள்ளார். அதே நேரம் தஞ்சாவூர் சிறுவனும் அங்கு சென்றான். குமரி சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளான்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தாய் மகளிடம் சம்பவத்தை கேட்டறிந்து விசாரித்த போது மகள் கர்ப்பமடைந்ததை தாய் கண்டுபிடித்தார். இதை அடுத்த பாதிக்கப்பட்ட சிறுமி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் சிறுவன் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் சிறுவனை தேடி வந்தனர்.
இதற்கு இடையே நேற்று குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு தஞ்சாவூரில் இருந்து சிறுவனுடன் அவனது தாயார் வந்தார். பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்த புகார் தொடர்பாக மகனை போலீசில் ஒப்படைத்தார். பெற்ற மகனை தாய் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்த சம்பவம் போலீசாரை வியப்பில் ஆழ்த்தியது. குளச்சல் போலீசார் சிறுவனை கைது செய்து நாகர்கோவில் உள்ள இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.